/

காதலும்...  காதலைத்  தாண்டியும்!

""சில படங்கள்தான் சந்தோஷமும், பெருமையும், கர்வமும் தரும். இந்தப் படத்தின் போது அற்புதமான படம் எடுக்கிறோம் என்கிற கர்வம் வந்தது

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:06 am

ஜி. அசோக்

""சில படங்கள்தான் சந்தோஷமும், பெருமையும், கர்வமும் தரும். இந்தப் படத்தின் போது அற்புதமான படம் எடுக்கிறோம் என்கிற கர்வம் வந்தது. "அமர காவியம்' நிச்சயம் அதிர்ச்சிகளை உண்டாக்கும்'' என்று பிரகாசமாகச் சிரிக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். "நான்' படத்தின் மூலம் அதிர்வலைகளை உண்டாக்கியவர்.
 ஒவ்வொரு ஃப்ரேமும் எனக்கே ஆச்சரியம்தான். சிறு வயதில் இருந்து மனசுக்குள் ஊறிக் கிடந்த கதை. என் முதல் படமாக இதைத்தான் எடுத்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் எல்லாமே காதல் கதைகளாக வந்து கொண்டிருந்தன. அதனால்தான் இதை இப்போது கொண்டு வந்திருக்கிறேன். கேட்டு, பார்த்து, வளர்ந்த கதைகள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் இருக்கும். அதில் ஒரு சில கதைகள்தான் வாழ்வின் கடைசி நாள்கள் வரைக்கும் மனதில் நிறைந்து கிடக்கும். அப்படி எங்கள் தஞ்சாவூர் பக்கம் கேட்ட ஓர் அதிர்ச்சிகரமான காதல்தான் இந்த கதையின் மூலம். அதை முன்னிறுத்தும் விதமாக என் டீன் ஏஜ் பருவத்தில் பார்த்த சில காதல் சங்கதிகளையும் ஒன்றிணைத்து உரு சேர்த்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிஷமும் எனக்குள் வளர்ந்த கதை. காதல் என்பதைத் தாண்டி இந்த சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான ஒரு சினிமா தரப் போகிறேன் என்கிற நம்பிக்கை இந்த சினிமாவை முடித்துப் பார்க்கும்போது தெரிகிறது.

காதல் கதைக்கு இத்தனை நம்பிக்கை வார்த்தைகளா....? சரி... அப்படி என்ன அதிர்ச்சி தரப் போகிறீர்கள்...?
 காதல்! இந்த ஒற்றைச் சொல்லில் எத்தனை எத்தனை கதைகள். எத்தனை வித மனிதர்களின் கனவுகளை, மகிழ்ச்சியை, துக்கத்தை காலந்தோறும் தமது நினைவுக் குறிப்புகளில் எழுதிக் கொண்டே இருக்கிறது காதல். வித்தியாசமான காதலர்கள் வந்து கொண்டே இருக்க ஆரவாரமின்றி வேடிக்கை பார்க்கிறது அது. வருஷக் கணக்கில் காத்திருந்து வியர்வை வழிய வழிய மனம் உருகி சொன்ன காதல் இன்றைக்கு இல்லை. மனசை அப்படியே எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்பி வைக்கிற தலைமுறை பேஸ்புக், டிவிட்டர் என வந்து நிற்கிறது. இந்த தலைமுறை காதலை எப்படி பார்க்கிறார்கள் என பளீச்சென புரிய வைக்கும். எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் யாரும் முழுமையாக பதிவு செய்யாத கதை.

ஒரு ப்ரீயட் படத்தை இவ்வளவு விரைவாக முடித்து விட முடியுமா...?
 கேட்டது எல்லாமே கிடைத்தது. 80-களில் இந்த காதல் எந்த இடத்திலும் நடந்திருக்கும். எல்லோரும் கடந்து வந்த இடம்தான். ஆனால் அதை கலர் ஃபுல்லாக சொல்ல ஆசை. அதற்காக நான் போன இடம் ஊட்டி. கொஞ்சம் கோவை. சீசனுக்கு ஏற்ப படப்பிடிப்பு. நம்பிக்கையான உழைப்பைத் தந்தார் கலை இயக்குநர் செல்வகுமார். 80-களில் கிராமங்களின் முகங்களை வைத்துக் கொண்டு காட்சியளித்த சின்ன நகரங்களைப் போன்று நிஜமாகவே உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினோம். எழில் மிகு இயற்கைக் காட்சிகளோடு உன்னதமான காதலும் சேர்ந்து உருவாகியிருப்பதால் நிச்சயம் இது சினிமாவாக இருக்காது. கடந்து போன ஒரு வாழ்க்கைப் பதிவாக இருக்கும்.

நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு... ஜிப்ரான் இசை... என படத்துக்கு புது டோன் இருக்கே...?
 ஆர்யா என் நண்பன். ஒரே தெருவில் வீடு. அடிக்கடி சந்திப்போம். நிறையப் பேசுவோம். சினிமா தாண்டியும் கூட ஆர்யா நிறையப் பேசுவான். எதேச்சையான சந்திப்பில்தான் ஒரு கதை சொன்னேன். அப்படியே மனம் உருகி நின்றான். ஆர்யாதான் ""இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்'' என முன் வந்தான். படம் முழுவதுமே வெளியூர் ஷூட்டிங் என்ற போதும், ""ஏன் இருந்தால் என்ன? நல்லாவே எடு...'' என்றான். ஆர்யா தம்பி சத்யா ஹீரோ. நிச்சயமாக வலிந்து திணிக்கப்படவில்லை. நானே எடுத்த முடிவுதான். "வாகை சூட வா' பாடல்களுக்கு நான் அடிமை. அதனால் ""இசைக்கு ஜிப்ரான் வேண்டும்'' என்றேன். ""உன் இஷ்டம்''என முழு சுதந்திரம் கொடுத்தான். நல்ல கதை, ரசிகர்களை சேர நல்ல தயாரிப்பாளர் வேண்டும். அந்த இடத்தில் எனக்கு ஆர்யா கிடைத்தது வரம்.
 ஒளிப்பதிவாளர் இயக்குநராக இருப்பதில் என்ன வசதி...?
 நான் தொழில் கற்ற இடம் அப்படி. நான் ஜீவாவிடம் ஒளிப்பதிவு உதவியாளராகத்தான் வேலை பார்த்தேன். அவர்தான் கதைகள் வாசிப்பதிலும், கதைகள் எழுதுவதிலும் ஆர்வத்தைக் கொண்டு வந்தார். இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இரண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜீவா சார் ஆட்சி செய்வது பிடிக்கும். அதனாலே அந்த இடம் எனக்கும் கனவாக இருந்தது. இப்போது இதிலும் அப்படித்தான். இயக்குநர் நினைப்பதை ஒளிப்பதிவாளர் கொண்டு வந்து விடுவாரா என்கிற சந்தேகம் எப்போதும் உண்டு. இதில் இரண்டு இடத்திலும் நானே இருப்பதால் சந்தேகப் பேச்சுக்கே இடம் இல்லை. என்ன நினைக்கிறேனோ அதை மட்டுமே எடுப்பேன். மற்றபடி பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.